PAGE 14

தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்!

பெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை உணராதவங்களே இருக்க முடியாது.. உணராதவங்களே இருக்க முடியாது.. அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ....

கறிவேப்பிலை - 200 கிராம்
பச்சை கொத்தமல்லி - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
நல்லெண்ணை - 600 கிராம்
பசுவின் பால் - 200 மில்லி

கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் மையாக அரைத்துக் கொள்ளவும்.

சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடவும். ஐந்து நிமிடங்கள் மேலும் சூடேறியப் பிறகு பச்சை கொத்துமல்லியைப் போடவும். அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.
நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளிக்கலாம். 

தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
__________________________________________________________________________________

நம்ம ஊரு வைத்தியம்.. கொத்தமல்லி.!

கொத்தமல்லியோட விதைக்கு, 'தனியா'னும் ஒரு பேரு உண்டு. ரசம், துவையல், குருமா, சாம்பார்... இப்படி எதைச் செய்தாலும், அதுல நாலு கொத்தமல்லி தழையை கிள்ளிப் போடறதுதான் இப்ப வழக்கமா இருக்கு. இதுக்குக் காரணம்... அதன் மூலமா நமக்குக் கிடைக்கற பலவிதமான பலன்கள்தான். அதேபோல, கொத்தமல்லி விதைகள் மூலமாவும் ஏகப்பட்ட பலன்களை அடைய முடியும்!

உடல் உஷ்ணத்தைக் குறைக்கறதோட... நாக்கு வறண்டு போய் இருந்தா, அதை சரிபண்ணுற தன்மை இந்த விதைகளுக்கு உண்டு. பித்த மயக்கம், நெஞ்செரிச்சல்னு நிறைய பிரச்னைகளை இது சரியாக்கும். ரெண்டு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை எடுத்து, பொன்வறுவலா வறுத்து பொடியாக்கி, ரெண்டு டம்ளர் தண்ணி விட்டு கொதிக்க வைக்கணும். அது ஒரு டம்ளரா ஆனதும் இறக்கி ஆற வெச்சு, தேன் இல்லைனா சர்க்கரை சேர்த்து குடிச்சு வந்தா... மேலே சொன்ன பிரச்னைகள் எல்லாம் சரியாகறதோட... தலைசுற்றல், வயித்துப்போக்குகூட சட்டுனு நின்னுரும். தூக்கமில்லாம தவிக்கறவங்களுக்கும் இது சரியான தீர்வைக் கொடுக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு கண்கண்ட மருந்துனு சொல்லலாம் இந்த கொத்தமல்லி விதைகளை! அட, ஆமாங்க... கொத்தமல்லி விதை 10 கிராம்... அதே அளவு வெந்தயம் எடுத்து, ரெண்டையும் லேசா பொன்வறுவலா வறுத்து தூளாக்குங்க. இதுல ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, ரெண்டு டம்ளர் தண்ணிவிட்டு ஒரு டம்ளராகுற வரைக்கும் கொதிக்கவிடணும். பிறகு, காலையிலயும் (வெறும் வயித்துல), சாயங்காலமும் குடிச்சு வந்தா... சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள்ள வரும்.

அங்காயப்பொடினு கேள்விப்பட்டிருப்பீங்க. அங்காயப்பொடியில கொத்தமல்லி விதை, வேப்பம்பூ, சுண்டைக்காய், மிளகு, சீரகம், சுக்கு, வெல்லம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு எல்லாம் சேரும். இந்த அங்காயப்பொடியை தினமும் சாப்பாட்டுல ஒரு டீஸ்பூன் விட்டு பிசைஞ்சு சாப்பிட்டு வந்தா... உடம்புல உள்ள நிறைய வியாதிகள் துண்டைக் காணோம்... துணியைக் காணோம்னு ஓடிப்போயிரும். முக்கியமா சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுல வரும்.
________________________________________________________________________________

முக்கனிகளில் முதல் கனி 'பலா'.!

முக்கனிகளில் ஒன்றான பலா சில குறிப்பிட்ட காலங்களில் மட்டுமேக் காய்க்கக் கூடியது. ஆனால் பலாப் பழத்தை விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள். அவ்வளவு சுவையான பலாப் பழத்தில் எத்தனையோ மருத்துவ குணங்கள் உள்ளன.

* கண் பார்வைக்கு உதவும் விட்டமின் ஏ பலாப்பழத்தில் அதிக அளவில் உள்ளது. இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தைத் தரும். நரம்புகளை உறுதியாக்கும், ரத்தத்தை விருத்தி செய்யும்.

* அடிக்கடி நோய் தாக்கி அவதிக்குள்ளாகுபவர்கள் பலா பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும்.

* பலாப் பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது. சில இடங்களில் சின்ன சின்ன பலாக்காய்களை விற்பனைக்கு வைப்பார்கள். அது எதற்கு என்று பலருக்கும் தெரியாது.

* அந்த பலாக்காயை வாங்கி வந்து கூட்டு செய்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்லது. பாலாக்காய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும்.

* பலாக்காய் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது. பலாக் காயை சமைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவற்றைக் குணப்படுத்தும்.

எனவே அடுத்த முறை பலாக்காயை எங்கு பார்த்தாலும் வாங்கிச் சென்று சமைத்து சாப்பிடுங்கள்.
___________________________________________________________________________________

கலோரி புரிந்ததும் புரியாததும்!

திரும்பின பக்கமெல்லாம் டயட் ஆலோசனைகள்... அறிவுரைகள்... போதாக்குறைக்கு பிரபலங்களின் ஸ்லிம் சீக்ரெட்ஸ் வேறு... எது சரி, எது தவறு என்கிற குழப்பம் ஒரு பக்கம்...

பி.எம்.ஐ... மெட்டபாலிக் ரேட்... பேலன்ஸ்டு டயட் என ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் உணவியல் ஆலோசகர்களின் பயமுறுத்தல் இன்னொரு பக்கம்...

படித்தவர்களுக்கே குழப்பம் உண்டாக்கும் பி.எம்.ஐ கணக்கீடும், பேலன்ஸ்டு டயட் பட்டியலும் பாமர மக்களுக்கு எங்கிருந்து புரியும்?

உணவு மற்றும் ஊட்டம் தொடர்பான அத்தனை சந்தேகங்களையும் இங்கே தெளிவுப்படுத்துகிறார் டாக்டர் தேசிகாச்சாரி. நீரிழிவு, ரத்த அழுத்தம், பருமன், வளர்சிதை மாற்றச் சீர்கேடுகள் போன்ற தொற்றாத நோய்களின் உயிர்குறிப்பான்களை மதிப்பீடு செய்வதிலும், வாழ்க்கைமுறை மாற்ற நடவடிக்கைகள் மூலமாக இவற்றை சரி செய்ய உதவுவதிலும் நிபுணரான இவர், உலக சுகாதார நிறுவனம், உலக வங்கி, யுனிசெஃப், டேனிடா போன்றவற்றில் சுகாதார ஆலோசகராக பணியாற்றிய அனுபவமும் உள்ளவர்.

பி.எம்.ஐ. (பாடி மாஸ் இன்டக்ஸ்)

ஒவ்வொருவரும் அவரவர் உயரத்துக்கு இவ்வளவு எடைதான் இருக்க வேண்டும் என ஒரு கணக்கீடு உண்டு. அந்தக் கணக்கீட்டை வைத்து தான் ஒருவர் சரியான எடையுடன் உள்ளாரா, கூடுதல் எடையுடன் உள்ளாரா, சராசரியைவிட குறைவான எடை கொண்டவரா அல்லது உடல் பருமன் உள்ளவரா என்பதைக் கண்டுபிடிக்க முடியும். உதாரணத்துக்கு...

எப்படிக் கணக்கிடுவது?

பி.எம்.ஐ. = எடை (கிலோ கிராம்களில்)
உயரம் (மீட்டர் ஸ்கொயர்)
பி.எம்.ஐ.

* 18.5 க்கும் கீழ் என்றால் சராசரியை விட குறைவான எடை கொண்டவர்கள்.
* 18.6 முதல் 24.9 வரை என்றால் நார்மல் எடை கொண்டவர்கள்.
* 25 முதல் 29.9 வரை என்றால் அதிக எடை கொண்டவர்கள்.
* 30 மற்றும் அதற்கு மேல் என்றால் உடல்
பருமன் கொண்டவர்கள்.

பி.எம்.ஐ.க்கு ஏற்ப ஒவ்வொருவருக்குமான கலோரி தேவை

18.5க்கும் கீழ்... 30-35 முதல் 35-40 கிலோ கலோரிகள்.
19 முதல் 25 வரை... 25 முதல் 30 கிலோ கலோரிகள்.
25 முதல் 30 வரை... 20 முதல் 25 கிலோ கலோரிகள்.
30 பிளஸ்... 15 முதல் 20 கிலோ கலோரிகள்.

இது தவிர ஒவ்வொருவரின் மொத்த கலோரி தேவை என்பது ஓய்வு வளர்சிதை மாற்றம் (ரெஸ்டிங் மெட்டபாலிக் ரேட்) மற்றும் உடலியக்கங்களின் தன்மையைப் பொறுத்து வேறுபடும். வயது, பாலினம் போன்றவையும் கணக்கில் கொள்ளப்பட்டே ஒவ்வொருவருக்குமான கலோரி தேவை கணக்கிடப்பட வேண்டும்.

ஒவ்வொருவரின் உடலமைப்பையும் எக்டோமார்ஃப், மெசோமார்ஃப் மற்றும் என்டோமார்ஃப் என 3 வகைகளாகப் பிரிக்கலாம்.

முதல் வகையைச் சேர்ந்தவர்கள், மெலிதான எலும்பு அமைப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களது வளர்சிதை மாற்ற விகிதமும், கார்போஹைட்ரேட் சகிப்புத் தன்மையும் அதிகமாக இருக்கும். இவர்களது உணவில் 55 சதவிகிதம் காம்ப்ளக்ஸ் (மெதுவாக செரிக்கக்கூடிய) கார்போஹைட்ரேட்டும், 30 சதவிகிதம் புரதமும், 15 சதவிகிதம் கொழுப்பும் இருக்க வேண்டும்.

மெசோமார்ஃப் வகையைச் சேர்ந்தவர்கள் நடுத்தர உடல்வாகு கொண்டவர்களாக, விளையாட்டு வீரர்களைப் போன்ற உடலமைப்புடன் இருப்பார்கள். இவர்களது உணவில் 40 சதவிகிதம் கார்போஹைட்ரேட்டும், 30 சதவிகிதம் புரதமும், 30 சதவிகிதம் கொழுப்பும் இருக்க வேண்டும். கடைசி வகையைச் சேர்ந்தவர்கள் பெரிய உடலமைப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். 25 சதவிகித கார்போஹைட்ரேட், 35 சதவிகித புரதம், 40 சதவிகித கொழுப்பு நிறைந்த உணவு இவர்களுக்கு அறிவுறுத்தத்தக்கது.

பேலன்ஸ்டு உணவு

‘பேலன்ஸ்டு உணவு’ அதாவது, சரிவிகித உணவு என்பது நமது உடலுக்குத் தேவையான எல்லா சத்துகளையும் தருவதாக இருக்க வேண்டும். நாம் சாப்பிடுகிற எல்லா உணவுகளிலும் எல்லா சத்துகளும் கிடைப்பதில்லை. ‘சரிவிகித உணவு’ என்பது, பல்வேறு உணவுப் பிரிவுகளைச் சேர்ந்த மாறுபட்ட பல உணவுகளிலிருந்து குறிப்பிட்ட அளவுகள் மற்றும் அளவீடுகளில் போதுமான ஊட்டச்சத்து தேவைகளோடு மன அழுத்தத்திற்கான கூடுதல் சக்தியையும் வழங்குகிற உணவு என்று பொருள் வரையறை செய்யப்படுகிறது.

எந்த உணவு எதற்கு?

* ஆற்றலைக் கொடுக்கும் உணவுகள்
(கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு).
* முழு தானியங்கள், சிறு தானியங்கள் - புரதம், நார்ச்சத்து, தாதுச் சத்து, கால்சியம், இரும்பு மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்.
* தாவர எண்ணெய், வெண்ணெய், நெய் - கொழுப்பில் கரையும் வைட்டமின்கள், அவசிய கொழுப்பு அமிலங்கள்.
* நட்ஸ், எண்ணெய் வித்துகள் - புரதம், வைட்டமின் மற்றும் தாதுச் சத்து.
* சர்க்கரை - ஒன்றுமில்லை. பாடி பில்டிங் உணவுகள் (புரதங்கள்)
* பருப்பு, நட்ஸ் மற்றும் எண்ணெய் வித்துக்கள் - பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், கண்ணுக்குத் தெரியாத கொழுப்பு மற்றும் நார்ச்சத்து.
* பால் மற்றும் பால் பொருள்கள் - கால்சியம், வைட்டமின் ஏ, ரிபோஃப்ளேவின், வைட்டமின் பி 12.
* இறைச்சி, மீன் - பி காம்ப்ளக்ஸ், இரும்புச் சத்து, அயோடின் மற்றும் கொழுப்பு.பாதுகாக்கும் உணவுகள் (வைட்டமின் மற்றும் தாதுச் சத்துக்கள்)
* பச்சைக் காய்கறிகள், கீரைகள் - ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், நார்ச்சத்து மற்றும் இதர கேரட்டீனாயிட்ஸ்.
* பிற காய்கறிகள் மற்றும் பழங்கள் - நார்ச்சத்து, சர்க்கரை மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்.
* முட்டை, பால், பால் பொருள்கள், அசைவ உணவுகள் - புரதம் மற்றும் கொழுப்பு.
______________________________________________________________________________

இருமலுக்கு கை கண்ட மருந்து சிற்றரத்தை.!

வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் மூலிகைகளில் சிற்றரத்தையும் ஒன்று. இதனை அலோபதி மருந்துகளாக மாற்றி நமது நாட்டிற்கு திருப்பி அனுப்புகின்றனர். சிற்றரத்தை கோழையை அகற்றுவதில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. வெப்பம் இதன் இயல்பு நிலையாகும். நாள்பட்ட வறட்டு இருமலுக்கு இது கை கண்ட மருந்தாகும். இருமலுக்கு சிற்றரத்தையை மிகவும் எளிய முறையில் பயன்படுத்தலாம்.

சிறிய துண்டு சிற்றரத்தை வாயிலிட்டு மெதுவாக சுவைத்தோமானால் ஒருவித காரம் தந்து விறுவிறுப்பும் தோன்றும். அந்த உமிழ்நீரை மெதுவாக தொண்டைக்குள் இறக்கிக் கொண்டு இருந்தோமானால் வறட்சியுடன் கூடிய இருமல் உடனே நின்று விடும். மேலும் வாந்தி, குமட்டல் ஆகியவற்றையும் இது விலக்கும். சீதளத் தொடர்புடைய நோய்கள் எதுவானாலும் சிற்றரத்தையை பயன்படுத்தினால் குணமாகும்.

சின்னஞ் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த நோய்கள், கணை இழப்பு, கப நோய்கள், போன்றவற்றிற்கு சிற்றரத்தையை ஆமணக்கெண்ணெயில் நனைத்துச் சுட்டுக் கரியாக்கி சிறிதளவு தேனில் உரைத்துக் கொடுத்தால் உடனடி குணம் தெரியும். ஐந்தாறு வயதுக் குழந்தைகளுக்குத் தோன்றும் சீதளக்காய்ச்சல், சாதாரணக் காய்ச்சல், வாத பித்த நோய் மற்றும் நுரையீரல் தொடர்பான பிணிகளுக்கு நூறு கிராம் சிற்றரத்தை பொடியாக்கி கொள்ள வேண்டும். நூறு கிராம் கற்கண்டை பொடியாக்கி தனியாகப் பொடியாக்கி அதனுடன் சிற்றரத்தை சேர்த்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை ஒரு சிட்டிகை அளவு வாயிலிட்டு சிறிதளவு பசும்பாலுடன் குடிக்க வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு ஏற்படும் பிணிகள் அகலும். பெரியவர்களுக்கு தோன்றக்கூடிய வாயுக்கோளாறுகள், இருமல், தலைவலி, சீதளக் காய்ச்சல், வாந்தி, பித்தம் மற்றும் சுவாசக்கோளாறுகள் நிமோனியாபோன்ற பிணிகளுக்கு புளியங்கொட்டை அளவுக்கு சிற்றரத்தை ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நன்கு சிதைத்து 200மில்லி நீரில் போட்டு கொதிக்க வைத்து நீர் கொதித்த பிறகு இறக்கி சில மணிநேரங்களுக்கு அப்படியே வைத்துவிட வேண்டும்.

பின்னர் அந்த நீரை வடிகட்டி எடுத்து அதனுடன் ஐம்பது கிராம் கற்கண்டை பொடித்துப் போட்டு வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் மூன்று வேளை குடித்து வர பெரியவர்களுக்கு பிணிகள் அகன்று குணம் தெரியும். சிற்றரத்தை, திப்பிலி, தாளிச பத்திரி ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் சேகரித்து கொள்ள வேண்டும். அம்மியை சுத்தமாகக் கழுவி அதில் சேகரித்த பொருட்களுடன் சிறிது நீர் விட்டு நைய அரைத்து கொள்ள வேண்டும்.

அரைத்த விழுதை 100 மிலி நீரில் கரைத்து கொதிக்க விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ள வேண்டும். இந்த மருந்தை பலவித நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம். இந்த மருந்தை நோயின் தன்மை, நோயாளியின் வயதுகேற்ப தேன் கலந்து கொடுக்க மூக்கடைப்பு, மூச்சு திணறல், தலைவலி, சீதளம், தும்மல், வறட்டு இருமல், குத்திருமல், மார்பு நோய்கள் எல்லா வகையான காய்ச்சல், கபகட்டு, கோழை ஆகியவற்றை மிக துரிதமாகக் குணமாக்கும்.
___________________________________________________________________________________

கருந்துளசியின் மருத்துவப் பயன்கள்..!

* ஆஸ்துமாவுக்கு எதிராக வேலை செய்யும் தன்மை (Anti-Asthmatic)

* ஆன்டி-ஆக்சிடென்ட் (Anti-oxidant) தன்மை

* வலி, வீக்கம்(Anti-inflammatory) போக்கும் தன்மை

* காய்ச்சலை போக்கும் தன்மை

* கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கும் தன்மை

* மனது சார்ந்த நோய்களை குணமாக்கும் தன்மை

* நோய் எதிர்ப்புத் தன்மை (Immune modulator)

* கண்புரை(ஊயவயசயஉவ)யிலிருந்து பாதுகாக்கும் தன்மை

மருத்துவத்தில் கருந்துளசியின் பயன்பாடுகள்:-

* ஒரு கைப்பிடி துளசி இலைக் கொழுந்துடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து அரைத்து, சுண்டைக்காய் அளவான மாத்திரைகளைச் செய்து காய வைத்துக் கொள்ள வேண்டும். வேளைக்கு ஒரு மாத்திரை நசுக்கி, தேனில் கலந்து, குழைத்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வறட்டு இருமல் உடனடியாக குறையும்.

* துளசி இலையை இலேசாக அவித்து 5 மி.லி. அளவுக்குச் சாறு எடுத்து காலை, மாலை வேளைகளில் ஒரு வாரம் வரை குடித்தால் தீராத சளித் தொல்லைகள் தீரும்.

* ஐந்து கிராம் துளசி இலையை, இரண்டு மிளகுடன் சேர்த்து நன்றாக அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து காலை மற்றும் மாலை வேலைகளில் வெந்நீரில் சேர்த்து குடித்தால் தீராத காய்ச்சல் குணமாகும்.
________________________________________________________________________________