PAGE 15

வெந்தயத்தின் எண்ணற்ற மருத்துவ குணங்கள்..!

வயிற்றுக் கோளாறுகளை நீக்கும் வெந்தயம் 

நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் வெந்தயத்தில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவைகள் எவையென நாம் பார்ப்போம், இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள்.

பின்பு வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம். வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

இது தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது. ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்து வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்த பின்பு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது. மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்தபொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.

வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும். வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபிபொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

உடல் குளிர்ச்சிக்கு

நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சிராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.

நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன. வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது. இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் எழுந்து அந்த தண்ணீரை பருகி வந்தால் உடல் குளிர்ச்சியாகவும், மலக்சிக்கலை போக்கவும் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. கோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் குறைவதோடு சீக்கிரம் ஆறும் தன்மைக் கொண்டது. வயிற்றுப்போக்கை குணமடைய செய்வதோடு, தாய்பால் பெருக்கும் தன்மையும் இதற்கு உண்டு. சர்க்கரை வியாதி குறைக்கும் மருத்துவ குணமும் இதில் உள்ளது.

வெந்தய கீரையை பகலில் சமைத்து சாப்பிட்டு வர வாய்வு தொல்லையிலிருந்து விடுபடலாம். வயிற்று உப்பிசம் இருந்தாலும் குறையும். வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, சுண்டக்காய்ச்சி, இருவேளையும் அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது. இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரை மணி நேரம் தலையில் தடவி குளித்து பாருங்களேன், முடி உதிர்வது குறைவதோடு, அடர்த்தியாக வளரவும் செய்கிறது. பொடுகு பிரச்சனை, அரிப்பு, குறைவதோடு முடி பளபளப்பாகவும் வைக்கிறது. வெந்தய விழுதை பருக்கள் மீது தடவ பருக்கள் மறையும்.

வெந்தயத்தை பயன்படுத்தி தான் பாருங்களேன் அதன் பயன்களும், மருத்துவ குணங்களும் என்னவென்று உங்களுக்கே தெரியும்.
__________________________________________________________________________________

பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்:-

1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
4. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
5. பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
6. பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
7. பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
8. பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
9. பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
10. பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
11. பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
12. பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
_______________________________________________________________________________

கூந்தல் பராமரிப்பில் வெங்காயத்தையும் சேத்துக்கோங்க...!

கூந்தல் பற்றிய பிரச்சனைகள் நிறைய உள்ளன. குறிப்பாக கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை, கூந்தல் வறட்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிறைய முயற்சிகளை, இதுவரை செய்திருப்போம். அதுவும் மார்க்கெட்டில் விற்கப்படும் கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தியிருப்போம். இருப்பினும், அதற்கான சரியான தீர்வை யாரும் பெற்றதில்லை. மேலும் இதனால் கூந்தலுக்கு இருக்கும் பிரச்சனைகள் தான் அதிகமாகியுள்ளதே தவிர, ஒரு முடிவு கிடைக்கவில்லை. எனவே எப்போதும் செயற்கை முறைகளை விட, இயற்கை முறைகளான வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கூந்தலை பராமரித்தால், நிச்சயம் அத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். 

மேலும் கூந்தலைப் பராமரிப்பதற்கு நிறைய வீட்டுப் பொருட்கள் உள்ளன. உதாரணமாக, முட்டை, தேன், தயிர், பேக்கிங் சோடா, வினிகர், எலுமிச்சை சாறு மற்றும் வெங்காயம் போன்ற பொருட்கள் கூந்தல் பராமரிப்பில் பெரிதும் உறுதுணையாக உள்ளன. ஆம், அனைத்து சமையலிலும் பயன்படும் வெங்காயம் கூந்தல் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் உதவியாக உள்ளது. அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள். * கூந்தல் உதிர்தல்: வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. பொதுவாக சல்பர் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு, கூந்தலையும் வலுவுடன் வைத்துக் கொள்ளும். 

எனவே அதற்கு வெங்காயத்தை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தேய்த்து, ஊற வைத்து குளிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு முன் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெங்காய பேஸ்ட்டை தலைக்கு தடவி மசாஜ் செய்து, சுடு நீரில் நனைத்த ஈரமான துண்டை, தலைக்கு சுற்றி, ஊற வைத்து பின்னர் குளிக்க வேண்டும். * கூந்தல் வளர்ச்சி: உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும். இத்தகைய இரத்த ஓட்டத்தை வெங்காயம் செய்வதால், வெங்காயத்தை சாறு எடுத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படியாக தடவி, மசாஜ் செய்து, 40 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க, கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். 

* ஸ்கால்ப் பிரச்சனை: 

வெங்காயச் சாற்றை ஸ்கால்ப்பில் படும்படியாக தடவினால், ஸ்காப்பில் தங்கி கூந்தல் வளர்ச்சியைத் தடுக்கும் தொற்றுகள் நீங்கி, கூந்தல் மற்றும் ஸ்கால்ப் நன்கு ஆரோக்கியமானதாகவும், சுத்தமாகவும் இருக்கும். * பொடுகுத் தொல்லை: தலையில் உள்ள அதிகப்படியான வறட்சியினால் பொடுகு வந்துவிடும். பொடுகானது தலையில் அதிகம் இருந்தால், கூந்தல் உதிர்தல் அதிகரித்து, அதன் வளர்ச்சி தடைப்படும். எனவே பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு, வெங்காயச் சாற்றுடன், எலுமிச்சை சாறு, தயிர் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, தலையில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இவையே கூந்தல் பராமரிப்பில் வெங்காயத்தின் நன்மைகள். இதுவரை நீங்கள் கூந்தலைப் பராமரிக்க வெங்காயத்தை பயன்படுத்தியுள்ளீர்களா? இல்லையெனில் உடனே ஆரம்பியுங்கள்.
_________________________________________________________________________________

மஞ்சள் காமாலை நோய்.. இய‌ற்கை வைத்தியம்.!

பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது. பித்தமானது பல காரணங்களால் மிகுதியாகி ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும் தூக்கமின்மையாலும் வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறி, காமாலைக் கிருமிகள் உண்டாகி, மஞ்சள் காமாலை நோயைத் தோற்றுவிக்கிறது.

பித்தமானது நஞ்சுபோல் உடலில் எங்கும் வியாபிக்கக்கூடிய தன்மையுள்ளது.அதோடு மட்டுமல்லாமல், நவீன உலகத்தில் உணவுப் பழக்கங்களாலும், மிதமிஞ்சிய உணவுகளாலும், பாமாயில் கலக்கப்பட்ட எண்ணெய்களாலும் ஒருதடவை சமைத்த உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவைப்படும்போது மாறி மாறி சூடுபண்ணி பல நாட்கள் சாப்பிடுவதாலும், உண்ட உணவானது உடலில் புளிப்புத் தன்மையை உண்டாக்கி செரியாமை ஏற்பட்டு குடலின் பித்தமானது சளியோடு கலந்து ரத்தத்தில் சேர்ந்துவிடுகிறது. 

இப்படிப்பட்ட உணவுப் பழக்கங்களால், மஞ்சள்காமாலை நோய்த்தொற்று ஏற்படுகிறது.மேலும், தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை மறந்ததாலும் நரம்புகள் சூடாகி பித்தம் அதிகரித்து மஞ்சள் காமாலை நோய் உண்டாகிறது.

பித்தமானது அலர்ஜியாகும்போது காமாலை நோய்க் கிருமி தோன்றி, முதலில் கல்லீரலைப் பாதித்து, கண்களில் மஞ்சள் நிறம் தோற்று விக்கிறது. சிறுநீர் மஞ்சளாக வெளியேறுகிறது. பொதுவாக மஞ்சள்காமாலைக்கு பித்தம் அதிகரிப்புதான் முக்கிய காரணமாகிறது.மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிறுநீர், மலம் கழித்த இடத்தை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவர்களையும் நோய்த் தொற்ற வாய்ப்புண்டு. 

ஆகையால், பாடசாலை முதல், கல்லூரி வரை ஏதேனும் ஒரு மாணவருக்கு மஞ்சள்காமாலை நோய் இருந்தால் அது மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடுகிறது.பொதுவாக இப்படிப்பட்ட பித்த அலர்ஜியால் உண்டாகும் மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருத்துவத்தில் கீழாநெல்லி என்ற மூலிகையை அதிகம் பயன்படுத்துவார்கள்.

கீழாநெல்லி - ஒரு கைப்பிடி
சீரகம் - 1 ஸ்பூன்

இரண்டையும் நீர்விட்டு அரைத்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் கொடுத்து வந்தால் பித்தம் தணிந்து, காமாலை நோய்த்தொற்று கிருமிகள் அழியும். 

கீழாநெல்லி, சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் இவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, சர்க்கரை கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் மெல்ல மெல்ல முழுமையாக குணமடையலாம்.

கீழாநெல்லி, சீரகம், பூவரச பழுத்த இலை, கரிசலாங்கண்ணி (வயல் வெளியில் வெள்ளைப்பூக்கள் நிறைந்து காதில் அணியும் கம்மல் போன்று இருக்கும்) இவை அனைத்தும் 3 கிராம் அளவிற்கு எடுத்துக் கசாயம் செய்து காலை, மாலை வேளைகளில் சாப்பிடும் முன் அருந்தினால் காமாலை நோய் குணமாகும்.

காய்ச்சல், குளிர்சுரம் வந்தால், பித்தத்தை அதிகப்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

பித்தத்தைத் தணிக்க, காய்கள், கீரைகள், பழவகைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

நாள்பட்ட உணவுகளை சூடாக்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மழைக்காலங்களில் நீரை கொதிக்க வைத்து ஆறியபின் அருந்தவேண்டும்.

புளி, உப்பு, காரம் குறைத்து சாப்பிட வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களையும், அதிக எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருள்களையும் தவிர்க்க வேண்டும்.
___________________________________________________________________________________